கீழ் வீட்டிற்கு குடிவரும் சிம்புவிற்கும் மேல் வீட்டில் குடியிருக்கும் அந்த வீட்டு உரிமையாளரின் மகள் த்ரிஷாவிற்கும் இடையில் ஒர்க்-அவுட் ஆகும் கெமிஸ்ட்ரி, ஹிஸ்ட்ரி, ஜாகரபி, மேத்தமடிஸ், இத்யாதி... இத்யாதிகளும் அவர்கள் காதலுக்கு கிளம்பும் எதிர்ப்புகளும்தான் விண்ணைத்தாண்டி வருவாயா மொத்த படமும்.
அதுவும், சினிமா என்றாலே வெறுக்கும் மலையாள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து சிம்புவை விட ஒரு வயது மூத்த த்ரிஷாவை, சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து, வாங்கிய என்ஜினீயர் பட்டத்தை தூர தூக்கி வைத்து விட்டு போராடும் இந்து குடும்பத்தை சார்ந்த சிம்புவிற்கு கொடுக்க யார்தான் சம்மதிப்பார்கள்? சிம்பு - த்ரிஷா காதல் வெற்றி பெற்றதா? சிம்புவின் சினிமா இயக்குனர் லட்சியம் நிறைவடைந்ததா? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு வித்தியாசமாக விடை சொல்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா படம்!
சிம்பு, வழக்கமான அதிரடி சிம்புவாக அலம்பல் பண்ணாமல் அழகாக அடக்கி வாசித்து அசத்தி இருக்கிறார். மீசை இல்லாமல் இந்தி நடிகர்கள் மாதிரி நச் லுக்குடன் த்ரிஷாவை மட்டுமல்ல... நம்மையும் டச் செய்து விடும் சிம்பு, காதலுக்காகவும், சினிமா வாழ்க்கைக்காகவும் நிறையவே போராடி முன்னதில் தோற்பதும், பின்னதில் ஜெயிப்பதும் படத்திற்கு கூடுதல் பலம்!த்ரிஷா, சிம்புவிற்கு அக்கா மாதிரி தெரிந்தாலும் வழக்கம்போலவே அழகாக பளீச் என்று இருக்கிறார். அவரை விட இவர் ஒரு வயது மூத்தவர் என கதையில் சொல்லப்படுவது ஆறுதல்.
சிம்புவைக் காட்டிலும் படத்தில் சம்மந்தப்பட்ட பாத்திரமாகவே த்ரிஷா வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல! பேஷ்..! பேஷ்..!! அதற்காக இன்டர்வெல்லுக்கு அப்புறம்., ஐ லவ் யூ., ஐ ஹேட் யூ என சிம்புவிற்கு மெசேஜ் அனுப்புவது போரடிக்கிறது.
சிம்புவின் அப்பாவாக கிட்டி, த்ரிஷாவின் அப்பாவாக பாபு ஆண்டனி, அண்ணன் சத்யா, த்ரிஷா அலெக்ஸ், சுப்புலட்சுமி கவுரவ வேடத்தில் சிம்பு இயக்கும் பட நட்சத்திரங்களாக வரும் நாகசைதன்யா, சமந்தா சிம்புவின் குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட எல்லோரையும் ஓவர் டேக் செய்து விடுகிறார் சிம்புவிற்கு உதவி செய்யும் ஒளிப்பதிவாளராக கரகரகுரலில் மெட்ராஸ் பாஷை பேசி படம் முழுக்க கலக்கும் கணேஷ்.
சிம்புவின் காதலுக்காக அவருடன் கேரள போகும் இவர்., டேய் வாடா தம்பி... ஓடிப் போயிடலாம் என்றும் மலை மலையா ஆட்கள் வந்து பொளந்து கட்டிடுவாங்க போயிடலாம் வாடா என்றும் இவர் சிம்புவை பயமுறுத்தும் இடங்கள் தியேட்டரை கைத்தட்டல் - விசில் சப்தத்தில் கதிகலங்க வைக்கறது. சபாஷ்!
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஓமண பெண்ணே, மன்னிப்பாயோ உள்ளிட்ட ஏழு பாடல்களும் இதம். மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஓவியமாக்கியுள்ளதென்றால் மிகையல்ல.
முன்பாதியில் உள்ள விறுவிறுப்பு, பின்பாதியில் காணாமல் போக காரணம் எடிட்டர் ஆண்டனி காரணமா? இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் காரணமா? எனக் கேட்டு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்! மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இளைஞர்கள் எல்லோரும் ஒருமுறை வீட்டைத்தாண்டி போய் பார்க்கலாம்!.
3 comments:
LOVE...
LOVE...
LOVE...
LOVE...
Story is good, ok but movie is going very slowly
Superb Storey and superb screen Play...
Saravana
Post a Comment